என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, May 10, 2014

4 மாணவர்களும் அரசியல்வாதிகளும்....
இன்றைய பேப்பரில் மாணவர்களின் தற்கொலை பற்றிய செய்தியை படித்து மன வேதனை அடைந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று அலசினால்.....பள்ளிகள், பெற்றோர்களே காரணம் என்று விளங்குகிறது. 

முதலில் பள்ளிகள்.....

இந்த வருடம் நல்ல தேர்ச்சி காட்டவேண்டும். அதனால் பள்ளிக்கு நல்ல பெயர் கிடைத்து இன்னும் அதிகமதிகம் மாணவர்கள் நம் பள்ளியில் சேர வேண்டும். கோடிகளில் கல்லாக்கட்ட வேண்டும் என்ற வியாபார நோக்கில் செயல்படும் பள்ளிகள் எந்த நேரமும் படி படி என்று மாணவர்களை கட்டாயப்படுத்துவதே மாணவர்கள் மீது செலுத்தப்படும் உச்சக்கட்ட வன்முறைதான்.

மதிப்பெண்கள் மட்டுமே மரியாதை என்று அடுத்தவர்களுடன் பேசக்கூட அவகாசம் கொடுக்காமல் மாணவர்களை தயார் படுத்துவதன் விளைவு தேர்வில் தேர்ச்சியடையா விட்டாலோ, தேர்ச்சியடைந்தும் மதிப்பெண்கள் குறைந்தாலோ பொசுக்கென்று தற்கொலை முடியை கையிலெடுக்கிறார்கள் வருங்கால தூண்கள்.

மாணவர்களுக்கு, முதலில் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கு என்று பள்ளிகள் கற்றுத்தர முன்வர வேண்டும். வெற்றி மட்டுமே வாழ்க்கையில்லை, தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை என்று யதார்த்தத்தை சொல்லி கொடுக்க வேண்டும். தன்னம்பிக்கையை சொல்லிக்கொடுக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்,  வாழ்க்கையை சொல்லிக்கொடுக்க வேண்டும் இந்த பள்ளிகள். பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பள்ளிகள், மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் ஒரு இயந்திரமாகத்தான் தயார் செய்யாமல், அவர்களை மன ரீதியாக தயார் படுத்துங்கள்.

அடுத்து பெற்றோர்கள்...... 

இந்த சமூகத்தில் மாணவர்களை இந்த பள்ளிகள் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக அணுகுகிறது என்றால், பெற்றோர்களோ தன் பிள்ளைகள் எடுக்கும் அதிக மதிப்பெண்களை தன் கவுரமாக நினைத்து குழந்தைகளை அணுகுகிறார்கள். மதிப்பெண் கூடுதலோ குறைவோ தேர்ச்சி பெற்ற மாணவர்களை வாழ்த்துங்கள் பெற்றோர்களே. அடுத்த மாணவர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டு உங்கள் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டாதீர்கள். நீங்கள் படிக்க நினைத்து படிக்காமல் விட்டது, உங்க அப்பா, தாத்தாக்கள் படிக்க நினைத்து படிக்காமல் விட்டதையெல்லாம் உங்க குழந்தைகள் மீது திணித்து அவர்கள் படிக்க நினைப்பதற்கு தடையாக இருக்காதீர்கள்.

அடுத்ததாக மாணவர்கள்.....

தேர்ச்சியடையாமல் தோல்வி அடைந்திருந்தால் அதற்காக கவலைப்படாதீர்கள் மாணவர்களே.....
இதுவே உங்களின் திறமைக்கு இறுதி வாய்ப்பல்ல.... இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் மறு தேர்வு எழுதுவதன் மூலம் வெற்றியடையலாம். . பேப்பரில் உங்கள் நம்பர் வராததால் நாளைய பேப்பரில் பெயர் வருமளவிற்கு ஏதும் செய்து தொலைக்காதீர்கள். வாழ்க்கை என்பது பத்தாவது பரீட்சை மட்டுமல்ல. அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கு.

இன்றைய உலகில் ஒரு மலிவான பொருள் ஒன்று இருக்கிறதென்றால் அது மனித உயிராகத்தான் இருக்கும் போல. பொசுக்கென்றால் தற்கொலை. பரீட்சையில் பாசானாலும் தற்கொலை, பெயிலானாலும் தற்கொலை. இன்று பேப்பரை திறந்தால் +2 தேர்ச்சி பெற்றவர்களின் கொண்டாட்ட செய்தி ஒரு புறம் என்றால், மறுபுறம் தேர்ச்சியடையாத மாணவர்களும், தேர்ச்சியடைந்தும் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாத மாணவர்களின் தற்கொலை பற்றிய செய்தியும் இடம்பெற்று மன வேதனை அடைய வைக்கிறது. மாவட்ட வாரியாக தேர்ச்சிபெற்றவர்கள் விகிதம் போட்டிருப்பது போல, மாவட்ட வாரியாக தேர்ச்சி பெறாதவர்களின் தற்கொலை விகிதத்தை போடாததுதான் பாக்கி.

ஒரு உயிரின் மதிப்பு தெரிய வேண்டுமானால், ஒரு புற்றுநோய் மருத்துவமனையில் போய் பாருங்கள். தினம் தினம் எத்தனை பேர் உயிர் போராட்டத்தில் இருக்கிறார்கள் என்று. இந்த உலகில் சாவதற்கு போராட வேண்டியதில்லை. அது ஒரு நிமிட விஷயம். ஆனால் சாவோடுதான் ஒவ்வொரு நாளும் போராடுகிறார்கள் நோயாளிகள். தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் அவர்களோடு ஒரு நாள் தங்கியிருந்து பாருங்கள். வாழ்வின் மகத்துவத்தையும் உயிரின் உன்னதத்தையும் உங்களுக்கு உணர்த்துவார்கள். அதன் பின் ஜென்மத்திற்கும் தற்கொலை எண்ணம் வராது உங்களுக்கு.

இறுதியாக ஒரு அறிவுரை.....

நம்ம நாட்டு அரசியல்வாதிகளிடம் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது.
தேர்தலில் தோற்கும் எந்த அரசியல்வாதியும் தற்கொலை செய்துகொள்வதில்லை. அவமானத்தில் வீட்டிலேயே முடங்குவதில்லை. மாறாக, வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு அடுத்து ஐந்து வருடங்களுக்கு பிறகுதான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால், மாணவர்களோ தேர்வில் தோல்வியடைந்து விட்டால் வாழ்க்கையிலேயே தோற்றது போல் உடனே மரணத்தை தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான மனநிலை. இப்போது தோல்வியடைந்தாலும் அடுத்த வெற்றிக்கான வாய்ப்பு அடுத்த சில மாதங்களில் மறு தேர்வின் மூலம் இருக்கிறது.

ஆகவே மாணவர்களே இந்த மாதிரியான தோல்விகளில் அரசியல்வாதிகளை முன்மாதிரியாக எடுத்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம். அரசியல்வாதிகளின் எதிர்காலம் மக்கள் கைகளில். ஆனால், மாணவர்களாகிய உங்கள் எதிர்காலமோ உங்கள் கையில்தான்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

 1. பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் பிற்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆக கூட வந்திருக்கிறார்கள்! இதை மாணவர்கள் அறிவது இல்லை! மதிப்பெண்ணுக்கு விரட்டி விரட்டி இறுதியில் இப்படி பிள்ளைகளை இழக்கிறார்கள் பெற்றோர்கள்! எப்போது திருந்துவார்களோ?!

  ReplyDelete
 2. ஆக அரசியல்வாதிகள்கூட முன்மாதிரியாக இருக்கிறார்கள்!
  நல்ல உதாரணம் ரஹீம்.
  பரீட்சைக்கு முன் 15 நிமிடங்கள் தங்களை தயார்படுத்த நேரம் ஒதுக்கியதுபோல, சில நாட்களுக்கு முன் அவர்களை வெற்றி தோல்வி என்று தயார்படுத்தும் அவசியமாகும்.

  ReplyDelete
 3. உண்மையில் படிக்காதவர்களும் பிழைப்பதற்கு அரசியலும் வழியே. தமிழ் நாட்டில் எத்தனையோ பஞ்சாயத்து தலைவர்கள் எழுதப் படிக்கக் கூட தடுமாற்றம் உடையவர்வர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.
  மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல என்பதை பெற்றோர் உணர்ந்து பிள்ளைகள் குறைவாக மதிப்பெண் பெற்றாலும் கவலைப் படக்கூடாது.

  நல்ல கட்டுரை

  ReplyDelete
 4. Good advise......at least politicians can be of some help to boost confidence.....tks.....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.