என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, April 15, 2014

2 நான் சிகப்பு மனிதன் - குடும்பத்துடனா போறீங்க?.....ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திற்கும் விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திற்கும் கதையில் பெரிய வித்தியாசமில்லை. முன்னதில் தங்கையை கற்பழித்தர்களை கண்டுபிடித்து பழி தீர்ப்பார் ரஜினி. பின்னதில் காதலியை கற்பழித்தவர்களை கண்டுபிடித்து பழிதீர்க்கிறார் விஷால். 

நார்கோலப்சி என்ற தூக்க வியாதி பாதிக்கப்பட்டிருக்கும் விஷாலுக்கு எந்த நேரத்திலும் தூக்கம் வரும். அதிர்ச்சி, கோபம், சந்தோஷம், நெகிழ்ச்சி என்று எல்லா நேரத்திலும் தூக்கம் வரும், செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது கூட தூக்கம் வரும் என்றால் வியாதியின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு சம்பவத்தில் விஷாலை சந்திக்கும் லெட்சுமி மேனனிற்கு விஷாலிடம் இருக்கும் வியாதியால் அவர் மேல் பரிதாபம் வந்து அந்த பரிதாபமே பரினாம வளர்ச்சியில் காதலாய் மாறுகிறது. ஆனால் பெரும் கோடீஸ்வரரான லெட்சுமி மேனனின் தந்தை ஜெயப்பிரகாஷ் அந்தக்காதலை ஏற்க மறுக்கிறார். விஷாலால் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது. அதனால் குடும்ப வாரிசு இல்லாமல் போய்விடும் என்று ஒரு மொக்கை காரணத்தை சொல்கிறார். இன்றைய நவீன உலகத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூட அவசியம் இல்லை. ஆனால் குழந்தையை பெற்றுக்கொள்ளவோ உருவாக்கவோ எவ்வளவோ வழிகள் இருக்கிறது என்ற விபரம்கூட இல்லாத அப்பா(வி) அவர் என்பது ஏற்க முடியாத விஷயம்.

லெட்சுமி மேனனுக்கோ விஷாலை விட மனமில்லை. அவர் தூங்காமல் இருக்கும் இடம் எது என்று கண்டுபிடித்து செக்ஸ் வைத்துக்கொள்கிறார். எங்கேயும் எப்போதும் விஷால் தூங்குவதாக சொன்னேன் அல்லவா. ஆனால் அவர் குளிக்கும்போது மாட்டும் தூங்க மாட்டார். அப்புறம் என்ன விஷாலை நீச்சல் குளத்தில் தள்ளி அவரோடு லெட்சுமி மேனன் கூடுகிறார். விஷாலே பாத்ரூமில் குளிக்கும்போது எனக்கு தூக்கம் வராது என்று சொல்லியும் லெட்சுமியும் பொறுமையாக பாத்ரூமிலேயே அதை செய்திருக்கலாம். இப்படி நீச்சல் குளத்தில் மூச்சு திணற திணற செய்திருக்க வேண்டியதில்லை. சரி விடுங்க, லெட்சுமியை வைத்து வேறென்ன செய்வது, இப்படியாவது ரசிகர்கள் கிளுகிளுப்பா இருக்கட்டும்னு இயக்குநர் நினைச்சுட்டார் போல.

அந்த நீச்சல் குள மேட்டரின் விளைவு கர்ப்பம். அடுத்ததாக இருவரும் ஒன்றாக வெளியில் போய் திரும்பும்போது சில சமூக விரோதிகளால் லெட்சுமி கற்பழிக்கப்பட, அதற்கு முன் பதட்டத்தில் விஷால் தூங்கிவிடுகிறார். செம மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் இது நடக்கிறது. காருக்குள் தூங்கும் விஷாலிடம் என்னை காப்பாற்று என்று கதவை திறந்து கத்திய லெட்சுமி மேனன் இன்னும் கொஞ்சம் கை நீட்டியிருந்தால் விஷாலை வெளியே இழுத்து போட்டிருக்கலாம். அப்படி போட்டிருந்தால் மழை நீர் பட்டு விஷாலின் தூக்கம் கலைந்திருக்கும். லெட்சுமியும் பலாத்காரத்திற்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம். அப்படி செய்யாததன் விளைவு கோமாவுக்கு போய்விடுகிறார் அவர்.

இடைவேளைக்கு பின், லெட்சுமியை பலாத்காரம் செய்தது யார், ஏன் செய்தார்கள் என்று விஷால் நூல் பிடித்து போனால் அந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அதாவது ஒரு ப்ளாஸ்பேக். அதை ப்ளாஸ்பேக் என்று சொல்வதைவிட அபத்தத்தின் உச்சம் என்று சொல்லலாம்.

விஷால் லெட்சுமி மேனன் லிப் லாக் சீனை வெட்ட சென்சார் போர்டு கத்தரியை ரெடியாக வைத்திருந்ததாகவும் விஷால் போராடி அனுமதி வாங்கியதாகவும் செய்தியில் படித்தேன். ஆனால் அந்த கிஸ் காட்சியெல்லாம் சும்மா. நான் நினைக்கிறேன் சென்சார் போர்டு வெட்ட காத்திருந்தது இந்த ப்ளாஷ்பேக் சீனைத்தான் என்று. அவ்வளவு கேவலம்.


லெட்சுமி மேனனை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தன் நார்கோலப்சி வியாதியையும்  மீறி எப்படி பழிவாங்கினார் விஷால் என்பதுதான் மீதிக்கதை. 
குடும்பத்தோடு போனீங்கன்னா அந்த ப்ளாஷ்பேக்கில் தர்மசங்கடத்தில் நெளியப்போவது உண்மை. 
Post Comment

இதையும் படிக்கலாமே:


2 comments:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.