என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, April 23, 2014

3 ஓட்டுப்போட போறீங்களா? ஒரு நிமிஷம்........


(குறிப்பு: கடந்த 2009-ஆம்  வருடம் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில்  யூத்புல் விகடனில் வெளியானஎன் கட்டுரை மீண்டும் உங்களின் பார்வைக்கு...... இது எல்லா தேர்தலுக்கும் பொருந்தும்.). 

இது தேர்தல் காலம். நிறைய பணம் புழங்கும் நேரம். முன்பெல்லாம் ஒரு கட்சியின் வேட்பாளர்களை அவரது தியாகமும், போராட்டமும், மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகளுமே தீர்மானித்தது. அதாவது, கட்சி நடத்திய நியாயமான போராட்டங்கள் எத்தனையில் அவர் கலந்து கொண்டார்? எத்தனை முறை சிறை சென்றார்? (இப்போதுள்ளது போல்
தலைவரோ, தலைவியோ ஊழலுக்காக நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டு சிறை சென்றால், அதற்காக பயணிகள் இருந்தாலும் கவலைப்படாமல் பஸ் எரிப்பது, பொது சொத்துக்களை சேதம் விளைவிப்பது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு அதன் தொடர்ச்சியாக சிறை செல்வதல்ல).
மாறாக, இந்தி எதிர்ப்பு மற்றும் இன்னபிற போராட்டங்களும், மிசா காலத்து சிறை கொடுமைகளும், அவரவர் பகுதி, தொகுதிகளில் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவது போன்ற காரியங்கள் தாம் ஒரு வேட்பாளரை தீர்மானித்தது.(ஹூம்... அது ஒரு கனாக்காலம் என்று 1960,70-களில் அரசியலை கவனித்தவர்கள் பெருமூச்சு விடுவது கேட்கிறது).

ஆனால், இப்போது ஒவ்வொரு கட்சியும் நடத்தும் நேர்காணலின் போது ஒருவரிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வியே உன் தொகுதியில் உன் ஜாதிக்காரர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?, உன்னை வேட்பாளராக நிறுத்தினால் எவ்வளவு 'சி' செலவு செய்வாய் என்பதுதான். சி என்பது அரசியல்வாதிகளின் பாஷையில் கோடி என்பதை நான் கோடிட்டு காட்டவேண்டிய அவசியமில்லை.
இன்றைய அரசியலை கூர்ந்துநோக்கும் அனைவரும் இதை அறிவார்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு ஒருவர் தலைமை
எதிர்பார்க்கும் பதிலை கூறிவிட்டால், தியாகங்களும் உழைப்பும் அங்கே பின்னுக்கு தள்ளப்பட்டு பணபலமும் ஜாதிபலமும் ஒருங்கே பெற்ற அவருக்கே சீட் நிச்சயமாகிறது.
இது, ஏறக்குறைய டெண்டர் விடுவதைப் போல அதிகமான பணத்துக்கு சீட்டை ஏலம் எடுப்பவர் வேட்பாளர் ஆவிடுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் கூட, பணம்தான் பாதாளம் வரை பாய்ந்து அவரது
வெற்றியை உறுதிசெய்து விடுகிறதே..?

இப்படி கோடி கோடியாக செலவு செய்யும் வேட்பாளர்கள் ஜெயித்துவந்ததும் தான் சிலவு செய்த பணத்தை வட்டியும் முதலுமாக
எடுப்பதிலேயே குறியாக இருப்பாகள். ஒருவேளை, இத்தனை கோடிகளை செலவுசெய்தும் தோற்றுவிட்டால், இவர்களுக்காகத்தானே இருக்கிறது வாரியம். ஏதாவது ஒரு வாரியத்துக்கு தலைவராகி சுருட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது
வேறுவிஷயம்.

 இத்தனை கோடிகளை செலவுசெய்து ஜெயித்துவந்த இவருக்கு எப்படி மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் வரும்? அதையும் மீறி இவர் நமக்கு ஏதாவது நல்லது செய்வார் என்று நாம் நினைத்தால், நம்மைவிட வடிகட்டிய அதிலும்
ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது.

ஒருவர் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்த காலமெல்லாம் காமராஜர், கக்கனோடு மலையேறிவிட்டது. இப்போது உள்ளவர்களால் அவரது மனைவி மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதவில்லை, இந்த லட்சணத்தில் நமக்கெப்படி சேவை செய்வார்கள்?
ஒரு வேட்பாளர் தான் ஜெயிப்பதுக்காக தன் தொகுதியிலுள்ள வாக்காளர்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேருக்கு குறைந்தபட்சமாக தலா ஐந்நூறு ரூபாய் வீதம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அதற்காக அவர் செலவு செய்யும் தொகை ரூபாய் ஐந்து கோடி. இந்த ஐந்து கோடி ரூபாயை ஏதேனும் ஒரு தொழிலில் போட்டால் கூட மாத வருமானமாக குறைந்தபட்சம் ஒரு சில லட்ச ரூபாய்  கிடைக்கும். அல்லது இரண்டு சதவீத வட்டிக்கு விட்டால்கூட மாதந்தோறும் பத்து லட்சம் கிடைக்கும். அதுகூட வேண்டாம், அந்த ஐந்து கோடியை பேங்கில் டெபாசிட் செய்துவிட்டு வீட்டில் படுத்துக்கிடந்தால் கூட ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாதந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

இதையெல்லாம் விடுத்தது இந்த கோடிகளை முதலீடு செய்ய ஒருவர் ஏன் இந்த அரசியலை தேர்வு செய்கிறார் என்று பார்த்தால் காரணம் வெரி சிம்பிள்.
இன்றையச் சூழலில் அரசியலில்தான் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது. பதவிக்கு பதவியும் ஆச்சு. மாதந்தோறும் இலவச ரயில் பயணம், இந்தியா முழுவதும் சுற்றி வர இலவச விமானப் பயணம், தொகுதி முழுவதும் சுற்றிவருவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று பயணப்படி, இலவச தொலைப்பேசி இணைப்பு / அழைப்பு. நாடாளுமன்றத்தில் பேசாமல் இருப்பதுக்காக சம்பளம், அலவன்ஸ் மற்றும் இத்யாதி இத்யாதிகள். முழுவதுமாக மூன்று
வருடத்தை பூர்த்திசெய்துவிட்டலே, பதவியில் இல்லாவிட்டலும் கூட ஓய்வூதியம் இன்னபிற சலுகைகள்.

ஒருவேளை தப்பித்தவறி அவர் அமைச்சர் ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம்... ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடின்னு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட வசதிகளையும் வாய்ப்புகளையும் இழக்க யாருக்குத்தான் மனசு வரும்? இப்படிப்பட்ட அரசியல்வியாதிகளை, மன்னிக்கவும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் அது ஒருதலை பட்சமாகிவிடும். இப்படிப்பட்ட சமூகசேவகர்களை உருவாக்கும் முக்கிய பங்கு இன்னொருவருக்கும் இருக்கிறது. அவர் வேறு யாருமல்ல... சாட்சாத் திருவாளர் வாக்காளர்களாகிய நாம் தான் அவர்.

இந்த வேட்பாளர்கள் கொடுக்கும் ஐந்நூறு, ஆயிரத்திற்காக நம் நம்முடைய பொன்னான வாக்குரிமையை இவர்களிடம் அடகு
வைப்பதால்தான்... இல்லை இல்லை விற்பதால்தான் இப்படிப்பட்ட சுயநல அரசியல் வியாபாரிகளும், அரசியல் விபச்சாரிகளும் தோன்றுகிறார்கள். இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதால்தான், நம் தொகுதிக்கு இவர்கள் ஏதும் செய்யாவிட்டால் நிற்கவைத்து கேள்விகேட்கும் தார்மீக உரிமையையும் நாம் இழந்துவிடுகிறோம்.
நமக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களுக்கு நாம் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு சிறிதளவு தோன்றினால்கூட, மக்கள் ஒன்றும் நமக்கு சும்மா வாக்களிக்க வில்லையே..?

நாம் கொடுத்த பணத்துக்குதானே வாக்களித்தார்கள்? பணத்துக்கு ஓட்டு சரியாப்போச்சு என்ற எண்ணம் மேலோங்கி ஏதும் செய்யாமலே இருந்துவிடுகிறார்கள். இவர்கள் கொடுக்கும் ஐந்நூறு, ஆயிரம் ரூபாயை நாம் நினைத்தால் ஓரிரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ ஏன் ஒரு மாதமே ஆனாலும் தப்பில்லை சம்பாதித்து விடலாம். ஆனால் இவர்களிடம் கைநீட்டி காசு வாங்கிவிட்டால் ஐந்து வருடங்கள் நம்மால் ஏதும் செய்யமுடியாது. கேவலம் அதிகபட்சம் ஒரு மாதத்தில் சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்களிடம் வாங்கிவிட்டோமேயானால் ஐந்து வருடத்துக்கு இவர்களிடம் அடிமையாக இருக்கும் அவல நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

ஐந்து வருடத்தில் நாம் எவ்வளவோ சம்பாதிக்க முடியும். ஆனால், ஐந்து வருடத்துக்கு நம் வாழ்க்கைத் தரம் இவர்கள் கொடுக்கும் இந்த ஐந்நூறு, ஆயிரங்களோடு நின்றுவிடுகிறது. அதாவது இந்த அரசியல்வாதிகளின் வாழ்க்கைத்தரம் உயர நாம் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கிக்கொண்டு இருந்துவிடுகிறோம். (நல்ல வேட்பாளர்களுக்கு நேர்மையான முறையில் வாக்களிப்போருக்கு இந்த சாடல்கள் பொருந்தாது) இப்படிப்பட்ட அவலநிலை மாறவேண்டுமானால் பணத்துக்கு வாக்களிக்கும் நிலையிலிருந்து நாம் மாறவேண்டும். 

எந்த ஒரு சமுதாயமும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை நாம் அவர்களை மாற்றப் போவதில்லை என்கிறது திருக்குர்-ஆன். என்ன ஓர் அருமையான வாசகம். நாம் மாறினால் நம் சமுதாயமும் மாறிவிடும். அப்படி நாம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் நம் தொகுதிக்கு செய்திருக்கும் நன்மையின் அடிப்படையில் வாக்களிக்க பழக வேண்டும். அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி. எந்த மதமாக இருந்தாலும் சரி. சுயேட்சையாக இருந்தாலும் சரி. இப்படி நாலு தேர்தல்களில் நாம் ஊழல்வாதிகளை புறந்தள்ளி நல்லவரை ஜெயிக்க வைத்தோமேயானால், பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியாது என்ற எண்ணம் இந்த அரசியல் வாதிகளுக்கு தோன்றி, நமக்கு நல்லது செய்து நம் மனதில் இடம்பிடிக்க பார்ப்பார்கள். கட்சித் தலைமையும் நல்லவர்களுக்கு சீட் கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் பணநாயகம் தோற்கும், ஜனநாயகம் செழிக்கும். அரசியலில் நல்லவர்களின் ஆதிக்கம் மேலோங்கினால்தான் நாடு சிறக்கும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். 


டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு


Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

 1. சரியாக சொன்னீர்கள்! மீள்பதிவானாலும் காலத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது! காசுக்கும் கட்சிக்கும் விலை போகாமல் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்!

  ReplyDelete
 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 3. நல்ல கட்டுரை. ஓட்டிற்கு பணம் வாங்குவதற்கு பதில் சிக்னலில் பிச்சை எடுக்கலாம்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.