என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, February 27, 2012

18 அம்புலி இயக்குநர் ஹரீஷ் நாரயணுடன் ஒரு சிறப்பு பேட்டி......


 அம்புலி.....தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் முப்பரிமான(3D)படம். அதன் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஹரீஷ் நாராயண் அவர்கள் ஒரு வலைப்பதிவர் என்பது பலரும் அறியாத தகவல். மேலும்,  நல்ல நண்பரும் கூட.....

அவரிடம் சமீபத்தில் அம்புலி படம் பற்றி ஒரு பேட்டி எடுக்கலாம் என்று தொலைபேசி வழியே தொடர்புகொண்டு கேள்விகளை தொடுத்தேன். அத்தனை கேள்விகளுக்கும் தொலைபேசி வழியாக பதில் அளிப்பது சிரமமாக இருக்கும், ஆகவே, உங்கள் கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பிவைக்கவும். பதில் தருகிறேன் என்று சொன்னார். அதன்படி நான் மின்னஞ்சலில் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கான அவரின் பதில்களும் உங்களின் பார்வைக்கு.....
(இந்த கேள்விகள் அம்புலி படம் வெளிவரும் முன்பு அவரிடம் கேட்கப்பட்டவை)

1) அம்புலி படத்தின் கதையைப் பற்றி...?
நமது கிராமங்களில் திண்ணையில் அமர்ந்தபடி பாட்டிகள் கூறும் கற்பனைக்கதைகள் அதீதமான ஃபேண்டஸி வகைக் கதைகளாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதைக்கு உயிர் கொடுத்து, கண், காது, மூக்கு எல்லாம் வைத்து புனைவுச்சாறை பிழிந்து எழுதப்பட்ட கதைதான் அம்புலி திரைப்படத்தின் கதை.

2) 3D-யில் தயாரிக்கும் அளவிற்கு என்ன விசேசம் இருக்கிறது இந்தக்கதையில்?
இந்தக் கதை 3Dக்காகவென்று தனியாக எழுதப்படவில்லை... இதனை 2Dயாக எடுக்கப்போவதாய் நினைத்துதான் எழுதினன். பிறகு இதை 3Dக்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்குமென்று தோன்றியது... குறிப்பாக இதில் வரும் கிராமத்து இயற்கைக் காட்சிகள், இரவுக்காட்சிகள் இவையணைத்தும் விஷூவல் விருந்தாக இருக்குமென்று தோன்றியதால் இதே கதையை 3Dக்கு உபயோகித்துக் கொண்டோம். நினைத்தது போலவே இப்படத்தின் 3D காட்சிகள் தனித்துவத்தோடு தெரிந்தது.

3) ஒரு இயக்குனருக்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பார்கள். உங்களுக்கு முதல் படமே 3டி படமாக அமைந்தது அதிர்ஷ்டம் என்பேன். இதற்கு இரட்டடிப்பு சிலவாகுமே?....எப்படி ஒத்துக்கொண்டார் உங்கள் தயாரிப்பாளர்?
ஒரு சிறு திருத்தம். இந்தப் படம் எனது முதல் படமல்ல, எனக்கும் ஹரி ஷங்கருக்கும் இது இரண்டாவது படம். இதற்குமுன் 'ஓர் இரவு' என்றொரு திகில் படத்தை நான்,நண்பர் ஹரி ஷங்கர் மற்றும் கிருஷ்ண சேகர் என்று மூன்று பேர் சேர்ந்து இயக்கியிருந்தோம்.அந்த படத்துக்கு சர்வதேச திரைப்படவிழாவில் 'சிறந்த இண்டிபெண்டென்ட் விருது' கிடைத்தது. அந்த படத்தைப் பற்றி பாராட்டி பேசவே தயாரிப்பாளர் திரு. KTVR லோகநாதன் எங்களை கோயமுத்தூருக்கு அழைத்திருந்தார். அப்போது, நாங்கள் அடுத்ததாக எடுக்கவிருக்கும் படத்தின் சாம்பிளாக ஒரு இரண்டு நிமிடத்திற்கான 3D காட்சியை காண்பித்தோம்.

அதைப் பார்த்து பிரமித்துப் போன தயாரிப்பாளர். இதே போன்றதொரு 3D படத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இப்படி பிறந்ததுதான் 'அம்புலி'

4) அம்புலி படப்பிடிப்பில் சந்தித்த சவாலான அனுபவம் அல்லது சவாலாக மிகவும் சிரமமாக எடுக்கப்பட்ட காட்சி?
'சவாலாக' என்ற கேள்விக்கு ஏகப்பட்ட காட்சிகள் இருக்கிறது... ஒரு உதாரணம், க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளை ஒரு பாழடைந்த கோவிலில் படம் பிடித்துக் கொண்டிருந்தோம்...

நாங்கள் வரைந்துவைத்திருந்த 'ஸ்டோரிபோர்டிங்' எனப்படும் காட்சியின் 'கதைவடிவ வரைபடங்களின்படி' சண்டைக்காட்சிகள் அந்த கோவிலின் கூரைமேல் எடுக்கப்பட வேண்டும், ஆனால், சண்டைக்காட்சிகளுக்கு தேவையான சாதனங்களை கோவிலின் கூரைக்குமேல் ஏற்ற முடியாதளவுக்கு அந்த கோவில் மிகவும் சிதிலமடைந்திருந்தது.

ஆனால், க்ரேன் டிபார்ட்மெண்ட்-ஐ சேர்ந்த திரு.குழந்தைவேலு மற்றும் அவரது குழுவினர்கள், நாங்கள் நினைத்தபடி சண்டைக்காட்சிகள் வரவேண்டுமென்று மிகவும் மெனக்கெட்டு, ஏராளமான சவுக்கு கொம்புகளை கோவிலுக்குள் முட்டுக் கொடுத்து, ஸ்டண்ட்  மாஸ்ட்ர் ரமேஷ் மற்றும் குழுவினர்களின் உதவியோடு ஆபத்தான அந்த கூரைமேல் 40 அடி க்ரேன் சாதனத்தை ஏற்றி,   நினைத்தபடி காட்சிகளை பதிவு செய்ய வழிவகுத்தனர்...

அந்த க்ரேன் டிபார்ட்மெண்ட் மற்றும் ஸ்டண்ட் டிபார்ட்மெண்ட் நண்பர்களுக்கு இந்த பதிவின்மூல(மு)ம் நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன்.


'சிரமமான' காட்சி என்றால், படத்தின் கடைசியில் இடம்பெறும் 'சந்திரன சூரியன' என்ற கூட்டுப்பிரார்த்தனை பாடல் ஒன்று உள்ளது. அந்த பாடலுக்காக மேட்டூருக்கு அருகிலிருக்கும் 'பண்ணைவாடி' என்ற ஒரு பரிசல்துறைமூலம் சென்றடையக்கூடிய தீவு (தற்போது அங்கிருக்கும் மக்களால் இந்த தீவின் பெயர்  'அம்புலித்தீவு' என்று அழைக்கப்படுகிறது... இந்த பெயர் வைத்த எங்கள் ஃபோட்டோகிராஃபர் GKவிற்கு நன்றி) ஒன்றில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தோம்...

கிராம மக்கள் சுமார் 150 பேர் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் 110 பேர் என்று ஒரு பெருங்கும்பல் பங்குபெறும் படப்பிடிப்பு அது... இரவு லைட் போட்டதும், முதலில் ஈசல்கள் படையாக வந்து அனைவரையும் கலங்கடித்தது... காது மூக்கு வாய் என்று பாரபட்சமில்லாமல் ஈசல்களின் தாக்குதலால் திணறிக்கொண்டிருந்தோம். ஒருவழியாக டீசல் புகையை வைத்து ஈசல்களை விரட்டியத்துவிட்டு படப்பிடிப்பை துவங்கினோம்...

 சிறிது நேரத்தில் பலத்த காற்று அடித்தது, பாடலுக்காக அந்த தீவில் நாங்கள் போட்டிருந்த 'மண்டப செட்' ஆட்டம் காண ஆரம்பித்தது... அதை ஆளுக்கொருபக்கம் பிடித்துக் கொண்டு முட்டுக்கொடுத்து நின்றிருந்தோம்... சற்றைக்கெல்லாம் பேய்மழை பிடித்தது... ஒதுங்க இடமில்லாமல் அனைவரும் திணறிக்கொண்டிருந்த வேளை, ஜெனரேட்டரும் அணைக்கப்பட்டது... கும்மிருட்டு... என்ன செய்வதென்று தெரியாமல் மழையில் தீவில் அமைதியாய் நின்றிருந்தோம்...

மழை நின்றபாடில்லாதபடியால்... திரும்பி சென்றுவிடலாம் என்று 'பேக்-அப்' சொல்லிவிட்டு பரிசலை நோக்கி நடந்தால்... பரிசல்-ஓட்டிகள்... பரிசலை எடுக்க முடியாது... காற்றுடன் கூடிய மழையென்பதால் பரிசலில் செல்வது பேராபத்து என்று கைவிரித்தனர்... அங்கிருந்த ஊர்மக்களில் சிலர்... தீவில் நின்றிருப்பதும் ஆபத்து... எந்நேரமும் ஏரியில் தண்ணீர் அளவு கூடினால் தீவு மூழ்கிவிடும் என்றும்... ஒரு குறிப்பிட்ட பாதையில் மாரளவு தண்ணீரில் நடந்தால் கரையை அடைந்துவிடலாம் என்று கூறவே, அனைவரும் ஊர்மக்களை தொடர்ந்து தண்ணீரில் நடந்தே கரையை அடைந்தோம்...

ஆனால், அந்த கும்மிருட்டில் நடந்துபோகையில் திடீரென்று அடிக்கும் மின்னல் வெளிச்சத்தில் அந்த ஏரியின் பிரம்மாண்டம் எனக்கு என்னென்னவோ பயத்தை நினைவுப்படுத்தியது மறக்க முடியாத அனுபவம்... இச்சம்பவத்தை தொடர்ந்து அடுத்த 2 நாளும் மழை எனவே, மூன்றாம் நாள் இரவு அதே இடத்தில் மிகுந்த சிரமத்துடன் அந்த பாடலை படம்பிடித்து முடித்தோம்...
5) அம்புலியை திருட்டு DVD/VCD-யில் பார்த்தால் தலைவலி வரும் என்று படித்தேன். இன்றைய நவீன உலகில் இது எந்த அளவு சாத்தியம்?
3D படத்தை கண்ணாடியில்லாமல் பார்க்கும்போது இரட்டை பிம்பங்களாக தெரியும்... இதை வெகுநேரம் தொடர்ந்து பார்க்க முடியாது... திருட்டுத்தனமாக பதிவு செய்யும்போதும் இரட்டை பிம்பங்களாக மட்டுமே பதிவு செய்ய முடியும்... பதிவு செய்த பிறகு திரையரங்குகளில் கொடுக்கப்படும் கண்ணாடியை அணிந்து பார்த்தாலும் 3D தெரியாது..காரணம், அந்த கண்ணாடிகள் திரையரங்குகளில் ப்ரொஜெக்ட் செய்யப்படும் விசேஷ ஒளிஅமைப்புக்காக வடிவு செய்யப்பட்டவை... அந்தக் கண்ணாடிகளைக் கொண்டு தொலைக்காட்சிகளில் 3D காண முடியாது... இந்த ஒரு வசதியினால், 3D படங்கள் திருட்டு விசிடி/டிவிடி கடைகளுக்கு அந்நியமாகவே இருக்கும்...

6)  தமிழில் முதல் 3D படம் அம்புலி என்பதாக விளம்பரத்தில் பார்த்தேன். ஆனால், ஏற்கனவே விஜயகாந்த் நடிப்பில் அன்னைபூமி என்று ஒரு படம் 3D-யில்  வெளியாகியுள்ளதே?
ஏற்கனவே வெளியான படங்கள் வேறு மொழிகளில் எடுக்கப்பட்டு பிறகு தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த படங்கள்... பிறகு தமிழிலேயே எடுக்கப்பட்ட படங்களில் சில காட்சிகள் மட்டுமே 3Dயில் வந்துபோவது போல அமைத்திருந்தார்கள், மேலும் 3D காட்சிகள் சரியாக தெரியாததால் விரைவில் அப்படத்தை 2Dயில் வெளியிட்டதாக எங்கள் மக்கள் தொடர்பாளர் மூலம் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டோம்... ... 'அம்புலி' முதல் 3D ஸ்டீரியோஸ்கோபிக் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் 100 சதவிகிதம் 3Dயில் மட்டுமே படம்பிடிக்கப்பட்டு வெளியாகியுள்ளது...

7) ஒரு படத்தை சாதாரணமாக எடுப்பதற்கும், முப்பரிமாண முறையில் எடுப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை சிரமத்தை விளக்குங்களேன்?
ஒரு 2D படம் எடுப்பதற்கு காட்சியில் சப்ஜெக்டுகள் மேலும் கீழும், இடமும் வலமும் நகர்த்தக்கூடிய திறன் இருந்தால் போதுமானது... ஆனால், முப்பரிமாண முறையில் எடுப்பதற்கு 'ஸ்டீரியோகிராஃபி' எனும் தொழில்நுட்ப வல்லமை வேண்டும்... அதாவது படத்தின் Z  Axis...  ஆழம் எனும் சப்ஜெக்டின் 'உள்ளே-வெளியே' அசைவின் ஆளுமைத்திறன் இந்த ஸ்டீரியோகிராஃபியின் அனுபவத்தில் தெரிய வரும்... எந்த பொருள், எவ்விடத்திலிருந்து, எங்குவரை நகர்த்தப்படலாம்... அந்த அசைவினுள் கதை சொல்வது எப்படி... போன்ற விஷயங்களை குழுவினருடன் சேர்ந்து கலந்தாலோசித்து படம் பிடித்தல் அவசியப்படுகிறது...

8) அம்புலி பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் ஏதாவது?
பட உருவாக்கத்தின்போது நடந்த குட்டி தகவல்கள்
1. இந்த அம்புலியை, 3Dயில் ஷூட் செய்ய முடிவெடுத்ததும் முதலில் ப்ளாக் & வொயிட் 3D-ல் எடுக்க நினைத்திருந்தோம்... பிறகு இந்த முடிவை மாற்றிக் கொண்டோம்...

2. அம்புலி படத்திற்கு மொத்தம் நான்கு பாகங்களுக்கு கதை ரெடி... (கதை மட்டுமே... ஸ்க்ரிப்ட் அல்ல...)

3. அம்புலி படத்தின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு பத்தாண்டுகளில் நடப்பது போல் வடிவமைக்கவுள்ளோம்... தற்போது வந்த முதல் பாகம் 1978-ல் நடந்தேறியது... அடுத்த பாகம் 1990-களில் நடக்கும், அடுத்தது 2000-த்தில் நடக்கும்... இப்படி தொடரும்..! ஆனால்,  எல்லாம் மக்கள் தீர்ப்பில்தான் உள்ளது... முதல் பாகத்தைப்போலவே எல்லா பாகங்களும் வெற்றிப் பெறும் பட்சத்தில் மேற்கூறிய விஷயங்களை கடைப்பிடிக்கலாம்...

9) உங்களை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்?
பிறந்து, வளர்ந்தது சென்னையில்... பள்ளிக்காலத்தில் 'ஜூராசிக் பார்க்' பார்த்ததிலிருந்து சினிமா ஜூரம்... இயக்குநர் ஸ்ரீதர், திரிலோக்சந்தர், மகேந்திரன் போன்றவர்கள் நம்மூரிலும்... ஹிட்ச்காக், ஸ்பீல்பெர்க், கேமரூன் போன்றவர்கள் வெளியூரிலும் பிடிக்கும்...

படித்தது MSc. IT... படிப்பிற்கேற்ற வேலையில் 5 வருடமிருந்தேன்... தப்பான நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு இருந்துக் கொண்டேயிருந்தது...


 கலைத்துறையில் எனது ஆசான் திரு.கிருஷ்ண சேகர் ('ஓர் இரவு' திரைப்படத்தை எங்களுடன் சேர்ந்து இயக்கியவர்... அம்புலி படத்தில் கிராமத்தில் கதாநாயகியின் அப்பாவாய், ஊர்த்தலைவராய் நடிப்பவர்) அவரின் வழித்துணை கிடைத்தது... அவரது வழிநடத்தலில் 2008 மார்ச் 19ஆம் தேதி முதல் கம்ப்யூட்டர் துறைக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவில் வந்து சேர்ந்தேன்...

நண்பர் சதீஷ் மற்றும் ஹரி ஷங்கரின் நட்பும் சினிமா தொழில்நுட்பம் கற்றுக் கொ(ண்டிருக்கிறேன்)ள்ளும் வாய்ப்பும் கிடைத்தது...  தமிழில் அதிகமாக சொல்லப்படாத கதைகளை சொல்ல வேண்டும் என்று ஆசை... குறிப்பாக தமிழைப் பற்றி அதிகமான விஷயங்களை சொல்ல வேண்டும் என்றும் ஆசை... நமது குழுவிலிருந்து வெளிவரும் படங்களில், ஒரு தனித்துவமும், தொழில்நுட்ப ரீதியில் ஒரு இம்பாக்ட்டும் இருக்க வேண்டும் என்று முயன்று வருகிறேன்...

=================அம்புலி படத்தில் அமுதன் கேரக்டரில் நடித்த ஹீரோ கடந்த ஆண்டு ஜூலை மாதம் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தமான விஷயம்.


 நன்றி ஹரீஷ் நாராயண்.... உங்களின் வெற்றிப்பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்...

 அம்புலி படம்பற்றி நான் எழுதிய விமர்சனம் படிக்க....

Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. இன்று தான் அந்த படம் பார்க்க போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள்.

   Delete
 2. சிறப்பான பதிவு ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 3. இந்த இயக்குனரின் முதல் படம் நன்றாக இருந்தும் அது சரிவர மக்களை சென்றடையவில்லை என சொல்கிறார்களே...?

  ReplyDelete
 4. 3D பற்றிய தகவல்கள் பல கிடைத்தது..இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றி மாம்ஸ்

   Delete
 5. கசாலி,

  பேட்டி அருமை. சில தொழில்நுட்ப தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சொல்றே?....வருகைக்கு நன்றி

   Delete
 6. என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன். தன்னம்பிக்கை மிக்க நபரின் பேட்டி இது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே.....வருகைக்கு நன்றி

   Delete
 7. கஸாலி... உங்கள் நண்பர் என்று சொல்லுகிறீர்கள்... என் சார்பாக அவைதாம் ஒரு வேண்டுகோள் வையுங்களேன்... அவருடைய முதல் படமான ஓர் இரவை பார்க்க தற்போது ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா... பதிவுலக நண்பர்களுக்காக சிறப்பு காட்சி - குறைந்தபட்சம் அவருடைய ஹோம் தியேட்டரில்... அவரிடம் கேட்டு சொல்லுங்கள்... என்னைப் போலவே நிறைய பேருக்கு அந்த ஆவல் இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக கேட்டு சொல்கிறேன்.

   Delete
 8. அம்புலி அணி தொடர்ந்து வெற்றி பெறட்டும்!!

  ReplyDelete
  Replies
  1. உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் சிவா....

   Delete
 9. அம்புலிப் பற்றி இன்னும் இருக்கா சார் ! இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.