என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, November 22, 2010

12 அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி-பாகம்-4

 1977 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் பிரதமர் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. ஜெயப்பிரகாசர் உருவாக்கிய "ஜனதா கட்சி", ஆட்சியை பிடித்தது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மார்ச் 19_ந்தேதி நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயணன் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:_ ராஜ்நாராயணன் (ஜனதா) 1,77,729 இந்திரா காந்தி (இ.காங்) 1,22,517 (1971 தேர்தலில் இதே தொகுதியில் ராஜ் நாராயணனை 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இந்திரா காந்தி தோற்கடித்தார்.

இந்திரா தேர்தலை எதிர்த்து ராஜ்நாராயணன் வழக்குத் தொடர்ந்து அதில் "இந்திரா தேர்தல் செல்லாது" என்று தீர்ப்பு கூறப்பட்டதும் அதன் விளைவாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது) உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி தோல்வி அடைந்தார்.

அவரை ஜனதா வேட்பாளர் ரவீந்திரபிரசாத் சிங் சுமார் 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்ட மொரார்ஜி தேசாய் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்றும் வாஜ்பாய், ஜெகஜீவன்ராம், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜோதிபாசு உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.

இந்திரா காந்தி மந்திரிசபையில் மந்திரிகளாக இருந்தவர்களில் 32 பேர் தோல்வி அடைந்தனர். மற்றும் காங்கிரசின் முன்னணி தலைவர்கள் பலரும் தோல்வியைத் தழுவினர். சங்கர் தயாள் சர்மா, தினேஷ்சிங், கே.சி.பந்த், பிரணாப் முகர்ஜி, அனுமந்தையா ஆகியோர் தோற்றவர்களில் முக்கியமானவர்கள். காங்கிரஸ் தலைவர்களில் சவான், பரூவா, கரண்சிங் உள்பட சிலர் மட்டும் வெற்றி பெற்றனர். ஆட்சியைப் பிடித்த ஜனதா பாராளுமன்றத்தின் மொத்த இடங்கள் 542 அதில் 299 இடங்களில் ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மற்ற கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள்:_ இ.காங்கிரஸ் 153 மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு 22 அ.தி.மு.க. 19 அகாலிதளம் 8 வ.கம்žனிஸ்டு 7 தி.மு.க. 1 இதர கட்சிகள் 33

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நெருக்கடி நிலை அத்துமீறல்கள் எதிரொலிக்கவில்லை என்றே சொல்லலாம். அ.தி.மு.க, இ.காங்கிரஸ், வ.கம்ïனிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகியவை ஒரு அணியாகவும், தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ், இ.கம்ïனிஸ்டு ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க _ இ.காங்கிரஸ் அணி அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த இடங்கள் வருமாறு:_ மொத்தம் _40 தொகுதிகள் (புதுச்சேரி உள்பட) அ.தி.மு.க. 19 இ.காங்கிரஸ் 14 வ.கம்ïனிஸ்டு 3 தி.மு.க _ ஸ்தாபன காங்கிரஸ் அணி ஸ்தாபன காங்கிரஸ் 3 தி.மு.க. 1. வடசென்னை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அங்கு ஆசைத்தம்பி வெற்றி பெற்றார்.

இந்திரா தோல்வி பற்றிய செய்திகள் வர வர, டெல்லியில் எதிர்க்கட்சியினர் பட்டாசுகளைக் கொளுத்தியும், வாண வேடிக்கைகள் நடத்தியும் விழா கொண்டாடினர். இந்திரா காந்தியின் வீட்டில் மவுனம் நிலவியது. இந்திரா தன் அறையில் தன்னந்தனியே அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய நீண்டகால சிநேகிதியான புபுல் ஜெயக்கர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும், இந்திரா எழுந்து அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, "புபுல்! நான் தோற்றுவிட்டேன்" என்றார். இருவரும் சற்று நேரம் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

பிறகு, "கவலைப்படாதே! மீண்டும் நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு இரு" என்று ஆறுதலாகக் கூறிவிட்டு புபுல் ஜெயக்கர் விடைபெற்றார். அப்போது அங்கு ராஜீவ் காந்தி வந்தார். "இவ்வளவுக்கும் சஞ்சய்தான் காரணம். அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" என்றார். (அப்போது சஞ்சய் காந்தி, அமேதி தொகுதியில் இருந்து திரும்பவில்லை). பாராளுமன்ற தேர்தலின் பெரும்பாலான முடிவுகள் வெளியான பிறகு (21_ந்தேதி) மாலையில் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இடைக்கால ஜனாதிபதி ஜாட்டியை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார். மறுநாள் (22_ந்தேதி) தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறைகளில் இருந்த "மிசா" கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்திரா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

"மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டும். நானும் எனது கட்சியினரும் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஜனநாயக முறையின் ஒரு பகுதி தேர்தல். தேர்தலை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல வாழ்வு அளிப்பதுதான் முக்கியமே தவிர, தேர்தலில் பெறும் வெற்றி அல்லது தோல்வி அதிக முக்கியம் அல்ல.

மத்தியில் அமையப்போகும் புதிய அரசாங்கத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதசார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம் ஆகிய அடிப்படை கொள்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். நமது தேசத்தை எதிர்நோக்கியுள்ள பணிகளை நிறைவேற்ற புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை அளிக்க நானும், காங்கிரஸ் கட்சியும் தயாராக இருக்கிறோம்.

எனது மந்திரிகளும், எனது கட்சியினரும், இந்த தேசத்தின் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் ஒத்துழைத்து என் மீது ஆழ்ந்த பரிவு காட்டினார்கள். பிரதமர் என்ற முறையில் உங்களிடம் இருந்து விடைபெறும் இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடமும் நான் கொண்டுள்ள அன்பும், அவர்களின் நல்வாழ்வில் நான் வைத்திருக்கும் அக்கறையும் மாறாமல் இருக்கிறது. என்னால் இயன்ற அளவு மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதே சிறு வயது முதல் என்னுடைய லட்சியம் ஆகும். இதுவே என்னுடைய நோக்கமாக இருக்கும். இப்போதும், எப்போதும் உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்".

இவ்வாறு அதில் இந்திரா காந்தி குறிப்பிட்டிருந்தார்.
மொரார்ஜி தேசாயின் கனவு பலித்தது வரும் புதனன்று.......
முந்தைய பாகங்கள்
பாகம்-1 , 2 , 3

நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை  உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே.... 


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


  www.ellameytamil.com

  ReplyDelete
 2. Really Interesting to read those historical events, thank you for sharing those

  ReplyDelete
 3. எல்லாம் சரி சஞ்சீவ் என்ன செய்தார் என்று சொல்லுங்கள். இந்திரா தோல்வி காரன்கள் என்ற தலைப்பில் சொல்லுங்கள் ..

  ReplyDelete
 4. புள்ளி விபரங்கள் பாராட்டுக்குரியவை.இதுவரை நான் அறியாத தகவல்கள் என்பதோடு நேர்த்தியாக யாரும் சொல்லாதவை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. மிசா பற்றிய தகவல் அருமை. எனக்கு புதியது

  ReplyDelete
 6. இதுப்போன்ற தகவல்கள் படிப்பது எனக்கு பிடிக்கும். அதுவும் இந்திரா காந்தி பற்றி படிப்பது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் . தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வராலாற்று தகவல்கள் அருமையாக உள்ளது நண்பரே..! தகவல் சேகரிப்பும் தொகுபபும் மிக நேர்த்தியாக உள்ளது. தொடரட்டும் தங்கள் வராற்றுத்தேடல் தொகுப்பு நண்பரே..!

  ReplyDelete
 8. உங்களைப் பற்றி பிலாசபி பிரபாகரன் எழுதியுள்ளார், பாருங்கள்..

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. மிசா பற்றிய தகவல்கள் நான் இதுவரை
  அறிந்திருக்க வில்லை. தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி நண்பா.

  ReplyDelete
 10. வழக்கம் போல்..அருமை...

  ReplyDelete
 11. நல்லதொரு வரலாற்றுப் பதிவ... கொப்பி பதிவு என்று சொன்னாலும் யோசிக்காதிங்க... அதைச் சொன்னவர் இலங்கையருக்கு இதை சேர்ப்பாரா...???

  ReplyDelete
 12. நன்றாகப் போகிறது.. தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.